இது அர்த்தமற்ற முடிவு - கம்பீரை விமர்சிக்கும் இந்திய முன்னாள் வீரர்.. என்ன நடந்தது..?


இது அர்த்தமற்ற முடிவு - கம்பீரை விமர்சிக்கும் இந்திய முன்னாள் வீரர்.. என்ன நடந்தது..?
x

image courtesy: BCCI

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அக்சர் படேல் 5-வது வரிசையில் பேட்டிங் செய்து வருகிறார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் கே.எல். ராகுல் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடி வருகிறார். ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் கீப்பராக நன்றாக பேட்டிங் செய்த அவர் இதற்கு முன் மிடில் ஆடரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் இந்த தொடரில் கே.எல்.ராகுல் 6-வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டு வருகிறார். அவருக்கு முன் 5-வது வரிசையில் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் பேட்டிங் செய்து வருகிறார். அந்த வாய்ப்பில் முதல் 2 போட்டிகளில் முறையே அக்சர் 52 மற்றும் 41 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். மறுபுறம் 6வது இடத்தில் விளையாடிய ராகுல் 2 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே 12 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ராகுல் போன்ற முழுமையான பேட்ஸ்மேனுக்கு பதில் அக்சர் படேலை 5-வது இடத்தில் விளையாட வைக்கும் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் முடிவு அர்த்தமற்றது என இந்திய முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "ராகுலுக்கு முன்னதாக அக்சர் படேல் விளையாடுவதைப் பார்த்து நான் வார்த்தைகள் இன்றி நிற்கிறேன். ராகுல் போன்ற முழுமையான பேட்ஸ்மேனை 6வது இடத்தில் தள்ளுவதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? இதுவே 5/3 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறும்போது சவாலான பிட்ச்சில் அக்சர் படேலை 5வது இடத்தில் விளையாட வைக்க உங்களுக்குத் தைரியம் இருக்குமா?. இல்லையென்றால் இந்த சோதனையில் என்ன அர்த்தம் இருக்கிறது? இது முற்றிலும் அர்த்தமற்றது" என பதிவிட்டுள்ளார்

1 More update

Next Story