ஸ்ரேயாஸ் ஐயருக்கு இது கடவுள் கொடுத்த வாய்ப்பு - இந்திய முன்னாள் வீரர்


ஸ்ரேயாஸ் ஐயருக்கு இது கடவுள் கொடுத்த வாய்ப்பு - இந்திய முன்னாள் வீரர்
x

image courtesy: AFP

தினத்தந்தி 8 Feb 2025 8:21 PM IST (Updated: 8 Feb 2025 9:28 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விராட் காயத்தை சந்தித்ததால் மட்டுமே தமக்கு வாய்ப்பு கிடைத்ததாக ஐயர் கூறினார்.

மும்பை,

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 249 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இருப்பினும் இந்த போட்டிக்கான ஆடும் அணியில் (பிளேயிங் லெவன்) தான் முதலில் தேர்வு செய்யப்படவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார். மேலும் விராட் கோலி காயமடைந்ததால்தான் தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறினார். இது பல முன்னாள் வீரர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் 4-வது இடத்தில் விளையாடிய ஸ்ரேயாஸ் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார். அதன் வாயிலாக ஒரு உலகக்கோப்பையில் 4வது இடத்தில் களமிறங்கி 500-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று நினைத்து கடவுளே முதல் போட்டியில் வாய்ப்பு கொடுத்ததாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அணி நிர்வாகம் அவரைத் தேர்ந்தெடுத்தது. இருப்பினும் அவரை விளையாட வைக்கலாமா அல்லது ஜெய்ஸ்வாலை விளையாட வைக்கலாமா என்ற கேள்வி அவர்களிடம் உள்ளது. தற்சமயத்தில் அவர்கள் இடது - வலது கை கலவையை விரும்புவதால் ஜெய்ஸ்வாலை அதிகமாக நம்புகிறார்கள். அதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதை அணி நிர்வாகம் விரும்பவில்லை.

ஆனால் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் தன்னை நிரூபித்த வீரர். தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் நினைக்கிறார். அவர் அவரது பார்வையில் சிறந்தவர். எனவே, கடவுளும் அவ்வாறே உணர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். நீங்கள் வேண்டாம் என்று நினைத்த வீரர்தான் அதிரடியாக விளையாடி போட்டியை ஒரு தலைபட்சமாக இந்தியாவின் பக்கம் மாற்றினார். அவர் அடித்த 50 ரன்கள்தான் ஆட்டத்தையே மாற்றியது" என்று கூறினார்.

1 More update

Next Story