அவர்கள் இருவரை சமாளிப்பது எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று - ரச்சின் ரவீந்திரா


அவர்கள் இருவரை சமாளிப்பது எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று - ரச்சின் ரவீந்திரா
x

கோப்புப்படம்

அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை சமாளிப்பது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று என ரச்சின் ரவீந்திரா கூறியுள்ளார்.

பெங்களூரு,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும், நியூசிலாந்து அணி டாம் லதாம் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொடர் குறித்தும், அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு குறித்தும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணியில் நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் பந்துவீசும் ஆற்றல் உடைய சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை சமாளிப்பது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று. இருவருமே பல சாதனைகளை படைத்த பந்துவீச்சாளர்கள்.

சுழற்பந்துவீச்சில் அசத்தும் அவர்கள் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி தேவையான போது பேட்டிங்கும் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள். எனவே அவர்கள் இருவரும் எங்களுடைய செயல்பாட்டை நிறுத்த் முயற்சிப்பார்கள். இருப்பினும் அவர்களுக்கு எதிராக நான் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.இந்திய மண்ணில் நடைபெறும் ஆடுகளங்களில் அவர்கள் இருவரையும் அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியாது.

அது எங்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அவர்களின் ரெக்கார்டை பார்க்கும் போது அவர்கள் எப்படிப்பட்ட வீரர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். இந்தியா போன்ற தரமான அணிக்கு எதிராக நாங்கள் சரியான திட்டங்களுடன் விளையாடினால் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story