விராட் மற்றும் ரோகித்தின் எதிர்காலத்தை அந்த தொடர்தான் தீர்மானிக்கும் - இந்திய முன்னாள் வீரர்


விராட் மற்றும் ரோகித்தின் எதிர்காலத்தை அந்த தொடர்தான் தீர்மானிக்கும் - இந்திய முன்னாள் வீரர்
x

image courtesy: PTI

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படாத விராட் மற்றும் ரோகித் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மும்பை,

இந்தியா - நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் புனேயில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி, 2-வது போட்டியிலும் தோல்வியடைந்ததால் 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது.

இந்த தோல்விக்கு புனேயில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாதது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பொறுப்புடன் செயல்பட வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அவர்களை கழற்றி விட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் விராட், ரோஹித்தை உடனடியாக கழற்றி விட வேண்டிய அவசியமில்லை என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இருப்பினும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அவர்களுடைய கெரியரை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். அந்தத் தொடரில் அவர்களின் செயல்பாடுகளை பார்த்து விட்டு சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் ஹர்பஜன் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "உடனடியாக எந்த முடிவும் தேவையில்லை. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் பெரிய தொடர் இருக்கிறது. பின்னர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலிய தொடர் நம்முடைய அணியில் பலருக்கு வாய்ப்பை தொடரலாமா அல்லது முடிக்கலாமா என்பதை காண்பித்துக் கொடுக்கும். அவர்களுக்கு தகுந்த மாற்று வீரர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று யார் சொன்னார்கள். கடந்த காலத்தைப் போலவே வருங்காலத்திலும் உங்களுக்கு சரியான மாற்று வீரர்கள் கிடைப்பார்கள்.

உள்ளூரில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். விராட் கோலி, ரோகித் சர்மா தற்போது சர்பராஸ் கான் ஆகியோர் உங்களுக்கு உள்ளூரிலிருந்தே கிடைத்தார்கள். அவை அனைத்தும் சரியான வீரர்களுக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு கொடுப்பதைப் பற்றியதாகும். நீங்கள் சரியான நேரத்தில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் விராட் கோலி கிடைப்பார்.

இல்லையேல் திறமையான வீரர்கள் அடையாளம் காணாமல் போவார்கள். விராட் கோலி இந்த நிலையை தொடுவதற்கு 15 வருடங்கள் தேவைப்பட்டது. எனவே திறமையான வீரர்களை கண்டறிந்து மேட்ச் வின்னர்களாக தெரிந்தால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். இங்கே ரோகித் சர்மா உள்ளூரில் சிறப்பாக செயல்பட்டதாலேயே நமக்கு கிடைத்தார்" என்று கூறினார்.


Next Story