ஒரே போட்டியில் 2 முறை காயத்தால் வெளியேற்றம்.. மீண்டு வந்து சதமடித்த வீராங்கனை


ஒரே போட்டியில் 2 முறை காயத்தால் வெளியேற்றம்.. மீண்டு வந்து சதமடித்த வீராங்கனை
x

ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

லாகூர்,

இந்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் லாகூரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 45 ஓவர்களில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாரா ப்ரைஸ் 55 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹேலி மேத்யூஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46.2 ஓவர்களில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஸ்காட்லாந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 114 ரன்கள் அடித்தார். ஸ்காட்லாந்து தரப்பில் கேத்தரின் ப்ரேசர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ் 95 ரன்களில் ஆடி கொண்டிருந்தபோது ஏற்பட்ட கடுமையான தசைப்பிடிப்பு காரணமாக பாதியில் வெளியேறினார். அந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் அடித்து வெற்றி பெறும் நிலையில் இருந்தது. இருப்பினும் ஹேலி மேத்யூஸ் வெளியேறிய பின்னர் வெஸ்ட் இண்டீஸ் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் சில நிமிடங்களிலேயே களத்திற்கு திரும்பிய ஹேலி மேத்யூசுக்கு மீண்டும் 99 ரன்களில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மீண்டும் வெளியேறினார். சில நிமிடங்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகளை இழக்க வேறு வழியின்றி ஹேலி மேத்யூஸ் களமிறங்கினார்.

அதிலும் வெற்றிக்காக போராடி சதமடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீராங்கனைகள் ஒத்துழைக்காததால் வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஹேலி மேத்யூஸ் 114 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரே ஆட்ட நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.


Next Story