விராட், ரோகித் சர்மாவுக்கு உள்ள ஒரே சவால் அது மட்டுமே - இந்திய முன்னாள் வீரர்


விராட், ரோகித் சர்மாவுக்கு உள்ள ஒரே சவால் அது மட்டுமே - இந்திய முன்னாள் வீரர்
x

image courtesy:PTI

தினத்தந்தி 30 Aug 2025 6:35 PM IST (Updated: 30 Aug 2025 6:38 PM IST)
t-max-icont-min-icon

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தற்போது சர்வதேச போட்டிகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட உள்ளனர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோலி 20 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர். ஆனாலும் பல மாதங்கள் விளையாடாமல் ஓய்வில் இருக்கும் அவர்களுக்கு ஒரு நாள் அணியில் தொடர்ச்சியாக இடம் கிட்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இருவரும் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்களால் ஒருநாள் உலகக்கோப்பை வரை தொடர்ந்து பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

அந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஏறக்குறைய 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. அந்த போட்டிகளில் இருவரும் தொடர்ந்து அசத்தினால் மட்டுமே உலகக்கோப்பை வரை இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பது கடினம் என பல முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர். இதனிடையே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான பி.சி.சி.ஐ.-ன் திட்டத்தில் இல்லை என தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதன் காரணமாக இருவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச கிரிக்கெட் என தகவல்கள் வெளியாகின. அந்த தொடருடன் அவர்களை கழற்றி விட பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது.

இருப்பினும் இந்த தகவல்களுக்கு பி.சி.சி.ஐ. துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா மறுப்பு தெரிவித்தார். அத்துடன் ஆஸ்திரேலிய தொடருடன் அவர்களை கழற்றி விடும் எண்ணம் பி.சி.சி.ஐ.-க்கு இல்லை எனவும் அவர் விளக்கமளித்தார். இது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது.

இந்நிலையில் தொடர்ச்சியாக விளையாடுவது மட்டுமே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு உள்ள ஒரே சவால் என்று இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “கோலி மற்றும் ரோகித் ஆகியோருக்குள்ள ஒரே சவால் என்னவென்றால், தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவதுதான். மற்றபடி அவர்கள் சிறந்த வீரர்கள். இந்த தொழில்முறை கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பேசும்போது, தற்போது அவர்களின் ஒரே கவனம் கிரிக்கெட் ஆடுவது மட்டுமே. அவர்களுக்கு மிகப்பெரிய சவால் என்னவென்றால், தொடர்ந்து ஆடுவதும், உடல் தகுதியை பராமரிப்பதும்தான். விராட் கோலி ஐ.பி.எல்-ல் மட்டுமே ஆடப்போகிறார். பின்னர் முதல் தர கிரிக்கெடில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எதையும் நிரூபிக்க அல்ல, வெறுமனே ஆடுவதற்காக.

எனவே, தொடர்ந்து ஆட்ட நேரத்தை பராமரிப்பது எளிதான காரியமல்ல. தற்போது டி20 கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒருநாள் போட்டிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. எனவே இரண்டிலும் போட்டிகளின் எண்ணிக்கை மாறிவிட்டது. ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டன. அதையும் தாண்டி நீங்கள் தொடர்ச்சியாக விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கையை நிர்வகித்தால் 2027 உலகக்கோப்பை பெரிய சவாலாக இருக்காது.

ரோகித் சர்மாவுடன் நான் பேசியபோது, அவர் உடல் தகுதி குறித்து மிகவும் ஆர்வமாக இருக்கிறார். விராட் கோலியும், இங்கிலாந்தில் பயிற்சி செய்யும் விதத்தைப் பார்க்கும்போது, நிச்சயமாக ஆர்வமாக இருக்கிறார். வீரர்களின் பார்வையில் இந்த ஆர்வம் முக்கியமானது, இது அவர்களைப் பற்றிய ஒரு சிறந்த விஷயம். இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் உண்மையாக நினைக்கிறேன்,

கம்பீர், அகர்கர் பற்றி எனக்கு தெரியும். அவர்கள் வீரர்களிடையே உள்ள தொடர்பில் தெளிவாக இருப்பார்கள். எப்படியிருந்தாலும் தொடர்ச்சியாக விளையாடுவது சவாலாக இருக்கும். 2027 உலகக்கோப்பையை பற்றி பேசினால், அவர்கள் தற்போது இந்தியாவுக்காக மற்ற வடிவங்களில் (டி20 மற்றும் டெஸ்ட்) ஆடவில்லை என்பதால் சவால் இருக்கும். ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகளில் விளையாடிய பின் அடுத்ததாக ஐ.பி.எல். தொடரில் மட்டுமே விளையாடுவார்கள். அப்படி நீண்ட இடைவெளி கழித்து நீங்கள் விளையாடும்போது பின்னடைவு ஏற்படும்” என்று கூறினார்.

1 More update

Next Story