இந்திய கிரிக்கெட் அணியில் என்னுடைய வேலை அதுதான் - துணை பயிற்சியாளர் பேட்டி
வெளிநாடுகளில் வெல்ல வேண்டும் என்ற ஆழமான எண்ணம் தற்போதைய இந்திய அணியில் காணப்படுவதாக ரையான் டென் டஸ்சாட் தெரிவித்துள்ளார்.
மும்பை,
சமீபத்தில் நிறைவடைந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-2 (3 போட்டிகள்) என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறியது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா? என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வெல்ல வேண்டும் என்ற ஆழமான எண்ணம் தற்போதைய இந்திய அணியில் காணப்படுவதாக புதிய துணைப் பயிற்சியாளர் ரையான் டென் டஸ்சாட் தெரிவித்துள்ளார். மற்றபடி ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திறமை இயற்கையாகவே இந்தியர்களிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே அதை மீண்டும் கொண்டு வருவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
"சுழல் பந்து வீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது என்பது நான் எதிர்பாராத மற்றும் கவனிக்காமல் போன ஒன்றாகும். வெளிநாடுகளில் நன்றாக விளையாட வேண்டும் என்ற மனநிலை தற்போதைய இந்திய அணியில் காணப்படுகிறது. அதனால் சுழல் பந்துகளை எதிர்கொள்வதில் பலமாக உள்ளோம் என்ற எண்ணத்துடன் அவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் அசத்துவதற்கு தேவையான விஷயங்களில் கவனத்தை திருப்பியுள்ளனர். அதனாலேயே அவர்கள் இலங்கையில் கொஞ்சம் தடுமாறினர். எனவே இந்தியர்களை மீண்டும் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் சிறந்தவர்களாக கொண்டு வரவேண்டும் என்பதே நான் அவர்களுக்கு உதவ எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஷயமாகும்.
அதற்காக இந்திய வீரர்களிடம் டெக்னிக்கல் அறிவை கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்கும் என்று நான் கருதவில்லை. அது மனநிலை, சூழ்நிலை விழிப்புணர்வு, போட்டியின் குறிப்பிட்ட சூழ்நிலையை எப்படி கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தது. அது அதைப்பற்றிய யோசனைகளை விளக்கி மனநிலையை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இந்திய அணியின் பயிற்சியாளராக அடுத்த 18 மாதங்கள் எனக்கு சுவாரஸ்யமானதாக இருக்கும். அது நீங்கள் பங்கேற்க விரும்பும் தொடர்கள் மற்றும் நீங்கள் எதிர்கொள்ள விரும்பும் அனைத்து சவால்களாக இருக்கும்" என்று கூறினார்.