ரோகித் சர்மாவுக்கு அந்த தொடர்தான் கடைசி வாய்ப்பு - ஆஸி.முன்னாள் வீரர்


ரோகித் சர்மாவுக்கு அந்த தொடர்தான் கடைசி வாய்ப்பு - ஆஸி.முன்னாள் வீரர்
x
தினத்தந்தி 9 Jan 2025 5:08 PM IST (Updated: 9 Jan 2025 5:18 PM IST)
t-max-icont-min-icon

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் முடிந்தவுடன் ரோகித் சர்மா ஓய்வு அறிவிப்பார் என்று கருத்துகள் நிலவின.

சிட்னி,

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவிற்கு நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் அவரது கெரியரில் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்டை தவற விட்ட அவர், அதற்கடுத்த 2, 3 மற்றும் 4-வது போட்டிகளில் கேப்டனாக களமிறங்கினார். இருப்பினும் அந்த போட்டிகளில் அவரது தலைமையில் விளையாடிய இந்திய அணி 2 மற்றும் 4 -வது போட்டிகளில் தோல்வி கண்டது. மழை காரணமாக 3-வது டெஸ்ட் சமனில் முடிந்தது.

இதனையடுத்து சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி போட்டியில் தானாகவே அணியிலிருந்து வெளியேறினார். இதனால் இந்த தொடர் முடிந்தவுடன் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று கருத்துகள் நிலவின. ஆனால் தான் இப்போதைக்கு ஓய்வை அறிவிக்கும் எந்த ஒரு முடிவையும் எடுக்கப்போவது இல்லை, கடைசி போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன் என்று ரோகித் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அடுத்ததாக நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா தன்னுடைய பார்மை கண்டறிந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இல்லையெனில் ஜஸ்பிரித் பும்ராதான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் இங்கிலாந்துக்கு செல்வதை நான் பார்க்கப் போவதில்லை. அவர் தனது செயல்பாடுகளை சொந்த மண்ணில் பார்க்க உள்ளார் என்று கருதுகிறேன். முதலில் அவர் வீட்டுக்கு சென்று தன்னுடைய குழந்தையை பார்ப்பார். அது அவருக்கு இங்கிலாந்துக்கு செல்வதற்கான உத்வேகத்தை கொடுக்கலாம். ஆனால் அது எனக்குத் தெரியாது. ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கான சூழல்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அவர் ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளது. அதுதான் அவருக்கு கடைசி வாய்ப்பாகவும் இருக்கலாம்.

பும்ரா முழு நேர கேப்டனாக இருப்பாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்தப் பொறுப்பு அவருக்கு சவாலை கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே அடுத்த கேப்டன் விராட் கோலியாக கூட இருக்கலாம் என்று நான் கணிக்கிறேன். ஒருவேளை விராட் கோலி மீண்டும் கேப்டனாக செயல்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். தற்சமயத்தில் இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனை பற்றி சிந்திப்பதை நான் நிறுத்தவில்லை.

இந்திய அணிக்கு அடுத்ததாக சவாலான காலங்கள் வரவுள்ளன. ஐபிஎல் நிறைய திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளது. அவர்களை வைத்து 1 முதல் 11 வரை இந்தியா தங்களுடைய புதிய அணியை உருவாக்க முடியும். ஆனால் உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களை வைத்து வெற்றிகரமாக செயல்பட முடியாது. எனவே அது இந்திய அணிக்கு கொஞ்சம் சவாலான காலமாக இருக்கும்" எனக் கூறினார்.


Next Story