தோனிக்குள் இன்னும் அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது - உத்தப்பா

தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்ற கேள்வி நிலவுகிறது.
மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கத்திற்கு மாறாக தடுமாற்றமாக செயல்பட்டு வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது.
முன்னதாக நடப்பு சீசனின் தொடக்க கட்டத்தில் சில போட்டிகளில் ஆடிய சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இதனிடையே 43 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று கடைசி போட்டியின் முடிவில் தோனி கூறினார்.
இந்நிலையில் சிறப்பாக விளையாடி சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்ல வேண்டும் என்ற ஆர்வமும் நெருப்பும் தோனிக்குள் இன்னும் இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இவையெல்லாம் அவரது உடல்நிலை மற்றும் அவர் எப்படி உணருகிறார் என்பதைப் பொறுத்தது. அவர் உண்மையிலேயே விளையாட விரும்புகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற நெருப்பு இன்னும் எரிகிறது.
கடந்த போட்டியின் முடிவில் தோனி பேசியதை வைத்து களத்திற்கு சென்று நன்றாக விளையாடி சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்ல வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்காக அவர் தற்போது திரும்பி சென்று அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு அவர் விரும்பும் நிலைக்கு வர அவரது உடலை மேம்படுத்த வேண்டும்" என்று கூறினார்.






