அதற்காக தேர்வுக்குழு தலைவர் அகர்கருக்கு நன்றி - கருண் நாயர்

கருண் நாயருக்கு சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க கருண் நாயர் கடுமையாக போராடி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் சொதப்பியதால் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அதன் பின் அணியில் இடம் கிடைக்க போராடி வருகிறார்.
தற்போது உள்ளூர் தொடர்களில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்து வரும் அவர், மீண்டும் தேர்வுக்குழுவின் கவனத்தை தன் பக்கம் மீது ஈர்த்துள்ளார். குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அந்த தொடரில் மட்டும் 7 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இருப்பினும், ஏற்கனவே நன்றாக விளையாடி 40க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டுள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு (கருண் நாயர்) வாய்ப்பு இல்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் குறைந்தபட்சம் தெளிவை தெரிவித்ததற்கு தேர்வுக்குழு தலைவர் அகர்கருக்கு கருண் நாயர் நன்றி தெரிவித்துள்ளார். அதே போல தமக்கு கிடைத்த வாய்ப்பைத் தாமும் சரியாக பயன்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் மீண்டும் நாட்டுக்காக விளையாட போராடுவேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"எனது இடத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டதை பார்த்தது நன்றாக இருந்தது. அதற்காக அவருக்கு நன்றி. அதன் காரணமான குறைந்தபட்சம் நான் ரஞ்சி கோப்பையின் அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவேன். கடந்த 16 - 18 மாதங்களில் செய்த அதே பேட்டிங்கை இப்போதும் நான் செய்து வருகிறேன். அதுவே இன்றைய நாளில் நான் அதிர்ஷ்டத்துடன் நிற்பதற்கான காரணமாக அமைந்தது. பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. கடந்த 3 - 4 வருடங்களில் செய்த அதே செயல்முறைகளைப் பின்பற்றி நாட்டுக்காக விளையாட முயற்சிப்பேன்" என்று கூறினார்.