இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஸ்டீவ் சுமித்தின் பேட்டிங் வரிசை மாற்றமா..?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
ஆனால் முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வீழ்த்துவோம் என்று பல முன்னாள் மற்றும் இந்நாள் ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஸ்டீவ் சுமித் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 4-வது வரிசையில் களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்த அவர் தொடக்க வீரராக பெரிய அளவில் சாதிக்கவில்லை.
இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரின் பேட்டிங் வரிசையை மாற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.