டெஸ்ட் கிரிக்கெட்: தோனியின் வாழ்நாள் சாதனையை தகர்த்து வரலாறு படைத்த ரிஷப் பண்ட்


டெஸ்ட் கிரிக்கெட்: தோனியின் வாழ்நாள் சாதனையை தகர்த்து வரலாறு படைத்த ரிஷப் பண்ட்
x
தினத்தந்தி 21 Jun 2025 4:58 PM IST (Updated: 21 Jun 2025 8:08 PM IST)
t-max-icont-min-icon

சுப்மன் கில் 147 ரன்களில் ஆட்டமிழந்தார்.

லீட்ஸ்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகின்றனர். சிறப்பாக ஆடிய இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டி வருகின்றனர்.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் போட்டிகளில் பண்ட் அடித்த 7-வது சதம் இதுவாகும்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி 6 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது தோனியின் அந்த வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள பண்ட் புதிய வரலாறு படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. ரிஷப் பண்ட் - 7 சதங்கள்

2. மகேந்திரசிங் தோனி - 6 சதங்கள்

3. விருத்திமான் சஹா - 3 சதங்கள்

தற்போது வரை இந்திய அணி 101.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 430 ரன்கள் குவித்துள்ளது. பண்ட் 113 ரன்களுடன் களத்தில் உள்ளார். கில் 147 ரன்களில் ஆட்டமிழந்தார்.

1 More update

Next Story