டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இந்திய வீரராக வரலாற்று சாதனை படைத்த ஜெய்ஸ்வால்


டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இந்திய வீரராக வரலாற்று சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
x

image courtesy: AFP

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது ஜெய்ஸ்வால் இந்த சாதனையை படைத்துள்ளார்.

புனே,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்துள்ளது. டாம் பிளண்டெல் 30 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுந்தர் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து இதுவரை 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 30 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் இந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 1006 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 23 வயதாகும் முன்னரே ஒரு வருடத்தில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

மேலும் சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய 5-வது வீரர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் கார்பீல்ட் சோபர்ஸ், கிரேம் சுமித், டி வில்லியர்ஸ் மற்றும் அலஸ்டயர் குக் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர்.


Next Story