ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்; ரஷித் கான் விளையாட மாட்டார்..?
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடங்குகிறது.
புலவாயோ,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நாளை புலவாயோவில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரரான ரஷித் கான் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் ஒரு தொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்.
அதேசமயம் இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக பார்க்கப்படுகிறது.