டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீசை கடைசி ஓவரில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா


டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீசை கடைசி ஓவரில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 24 Jun 2024 10:35 AM IST (Updated: 24 Jun 2024 10:39 AM IST)
t-max-icont-min-icon

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நடப்பு டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா முன்னேறி அசத்தி உள்ளது.

ஆண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன டி காக் மற்றும் ரீசா ஹென்ரிக்ஸ் இருவரின் விக்கெட்டுகளையும் இந்த இன்னிங்சின் 2-வது ஓவரிலேயே வீழ்த்தி ரசல் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தார். அந்த சமயத்தில் திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மழை நின்றதையடுத்து நிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மழை குறுக்கிட்டு போட்டி நேரம் தடைபட்டதால், இந்த ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவர்களில் 123 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இதனையடுத்து தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு மார்க்ரம் - ஸ்டப்ஸ் சிறிது நேரம் நிலைத்து ரன்கள் சேர்த்தனர். அதில் மார்க்ரம் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கிளாசென் அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினார். இதனால் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா பக்கம் திரும்பியது.

10 பந்துகளை சந்தித்த கிளாசென் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய மில்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து ஸ்டப்ஸ் ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தை எதிர்கொண்ட மார்கோ ஜான்சன் அதனை சிக்சருக்கு பறக்க விட்டு அணியை வெற்றி பெற வைத்தார். 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா 124 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 29 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சேஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 2-வது அணியாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.


Next Story