டி20 உலகக்கோப்பை: அடுத்தடுத்த ஆட்டங்களில் ஹாட்ரிக் விக்கெட்...வரலாற்று சாதனை படைத்த கம்மின்ஸ்


டி20 உலகக்கோப்பை: அடுத்தடுத்த ஆட்டங்களில் ஹாட்ரிக் விக்கெட்...வரலாற்று சாதனை படைத்த கம்மின்ஸ்
x
தினத்தந்தி 23 Jun 2024 2:56 AM GMT (Updated: 23 Jun 2024 3:01 AM GMT)

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

கிங்ஸ்டவுன்,

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 60 ரன்களும், ஜத்ரான் 51 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் ஜாம்பா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

கம்மின்ஸ் இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் ஹாட்ரிக் முறையிலேயே வீழ்த்தி அசத்தினார். 18-வது ஓவரின் கடைசி பந்தில் ரஷித் கான் விக்கெட்டை கைப்பற்றிய அவர், 20-வது ஓவரின் முதல் 2 பந்துகளில் கரீம் ஜனத் மற்றும் குல்பாடின் நைப் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார். வங்காளதேசத்திற்கு எதிரான முந்தைய ஆட்டத்திலும் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்த 2 ஆட்டங்களில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மேலும் சர்வதேச டி20 போட்டிகளிலும் அடுத்தடுத்த 2 ஆட்டங்களில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.


Next Story