டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணியை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி


டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணியை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி
x
தினத்தந்தி 13 Jun 2024 6:19 PM GMT (Updated: 13 Jun 2024 7:10 PM GMT)

நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களே எடுத்தது.

கிங்ஸ்டவுன்,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 27-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் - நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்காளதேச அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஷாண்டோ மற்றும் அவரை தொடர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸ் தலா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனைதொடர்ந்து கை கோர்த்த ஷகிப் அல் ஹசன் - தன்சீத் ஹசன் இணை நெதர்லாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தது. இவர்களில் தன்சீத் ஹசன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடிய ஷகிப் அரை சதம் அடித்து 64 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கிய மிட்சேல் 18 ரன்களும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மேக்ஸ் ஓ டவுட் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விக்ரம்ஜித் சிங், 26 ரன்களும், எங்கல்பிரிட் 33 ரன்களும் எடுத்து அணிக்கு நல்ல அஸ்திவாரம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

எனினும், ஒருசில ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் கடைசி கட்டத்தில் நெதர்லாந்து அணி தடுமாறியது. இறுதியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது. வங்காளதேச அணி தரப்பில் ரிஷாத் ஹுசேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.


Next Story