டி20 தொடர்: இந்தியா அபார பந்துவீச்சு... தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தல்


டி20 தொடர்: இந்தியா அபார பந்துவீச்சு... தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தல்
x

image courtesy: twitter/@BCCI

தினத்தந்தி 9 Nov 2024 12:16 AM IST (Updated: 9 Nov 2024 12:21 AM IST)
t-max-icont-min-icon

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

டர்பன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் டர்பனில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா சஞ்சு சாம்சனின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த மார்க்ரம் அதே ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் 11 ரன்களில் ஆவேஷ் கானின் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதன்பின் இந்திய சுழலில் தென் ஆப்பிரிக்கா சிக்கியது.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ரிக்கெல்டான் அதிரடியாக விளையாடிய நிலையில் வருண் சக்ரவர்த்தியின் சுழலில் சிக்கினார். இதன்பின் ஜோடி சேர்ந்த கிளாசென் - மில்லர் இணை படிப்படியாக அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. 42 ரன்கள் பார்ட்னர் அமைத்த இந்த ஜோடியை வருண் சக்ரவர்த்தி ஒரே ஓவரில் காலி செய்தார். கிளாசென் 25 ரன்களிலும், மில்லர் 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய பேட்ரிக் க்ரூகர் மற்றும் சிமெலேன் இருவரையும் ரவி பிஷ்னோய் ஒரே ஓவரில் வீழ்த்தினார். இறுதி கட்டத்தில் ஜெரால்டு கோட்சி அதிரடியாக விளையாட தென் ஆப்பிரிக்க அணி கவுரமான நிலையை எட்டியது.

முடிவில் வெறும் 17.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கிளாசென் 25 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


Next Story