இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்?
கேப்டன்ஷிப் வாய்ப்பில் சூர்யகுமார் யாதவ் வலுவான போட்டியாளராக இருக்கிறார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 போட்டி பல்லகெலேயில் வருகிற 27, 28, 30 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டி கொழும்பில் ஆகஸ்டு 2, 4, 7 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 போட்டி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஹர்திக் பாண்ட்யா முழு உடல் தகுதியுடன் இலங்கைக்கு எதிரான டி20தொடருக்கு தயாராக இருந்தார். அவரே கேப்டனாக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் இப்போது கேப்டன்ஷிப் வாய்ப்பில் சூர்யகுமார் யாதவ் வலுவான போட்டியாளராக இருக்கிறார். இலங்கை தொடருக்கு மட்டுமல்ல, 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி வரை சூர்யகுமார் கேப்டனாக நீடிக்க வாய்ப்புள்ளது' என்றார். புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் 33 வயதான சூர்யகுமார் யாதவுக்கே முன்னுரிமை அளிப்பார்கள் என்று தெரிகிறது.
அதே சமயம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு எடுக்க இருப்பதால் சுப்மல் கில், லோகேஷ் ராகுல் ஆகியோரில் ஒருவருக்கு அணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.