டி20 கிரிக்கெட்: போட்டி ஒன்று... 2 உலக சாதனைகள் படைத்த பரோடா அணி


டி20 கிரிக்கெட்: போட்டி ஒன்று... 2  உலக சாதனைகள் படைத்த பரோடா அணி
x

image courtesy: X/@krunalpandya24

தினத்தந்தி 5 Dec 2024 3:47 PM IST (Updated: 5 Dec 2024 4:16 PM IST)
t-max-icont-min-icon

பரோடா அணியில் அதிகபட்சமாக பானு பனியா 134 ரன்கள் குவித்தார்.

இந்தூர்,

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குருனால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணி, சிக்கிமை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற பரோடா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பரோடா அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே சிக்கிமின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஷஸ்வாத் ரவாத் 43 ரன்களிலும் (16 பந்துகள், 4 பவுண்டரி & 4 சிக்சர்), அபிமன்யு சிங் 53 ரன்களிலும் (17 பந்துகள், 4 பவுண்டரி & 5 சிக்சர்கள்) ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய பானு பனியா, ஷிவாலிக் சர்மா, சோலங்கி ஆகியோரும் அதிரடியில் பட்டையை கிளப்ப பரோடா அணியின் ரன்ரேட் ஜெட் வேகத்தில் எகிறியது. இந்த ஆட்டத்தில் பவுண்டரிகளை விட சிக்சர்கள் அதிகம் பறந்தன.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பரோடா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. பானு பனியா 134 ரன்கள் (15 சிக்சர்கள் & 5 பவுண்டரிகள்) விளாசி களத்தில் இருந்தார். ஷிவாலிக் சர்மா 55 ரன்களிலும், சோலங்கி 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சிக்கிம் 20 ஓவர்களில் 86 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பரோடா 263 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது.

இந்த போட்டியில் பரோடா 2 உலக சாதனைகளை படைத்துள்ளது.

அவை விவரம்:-

1.டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் கம்பியா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே 344 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.

2. மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசிய அணி என்ற மற்றொரு உலக சாதனையும் படைத்துள்ளது.


Next Story