டி20 கிரிக்கெட்: தொடர்ச்சியாக 9 வெற்றிகள்.. ஆஸ்திரேலியா அசத்தல்

image courtesy:ICC
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
டார்வின்,
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி டார்வினில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டிம் டேவிட் 83 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மபாகா 4 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ரிக்கல்டன் 71 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பென் துவார்ஷியூஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் தொடர்ச்சியாக 8 வெற்றி கண்டிருந்ததே ஆஸ்திரேலியாவின் அதிகபட்சமாக இருந்தது. தற்போது முதல் முறையாக 9 தொடர் வெற்றிகளை பெற்று அசத்தி உள்ளது.
இந்த பட்டியலில் ஐ.சி.சி.-ன் முழு உறுப்பினர் அந்தஸ்து கொண்ட நாடுகளில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக தலா 12 வெற்றிகளை கண்டு முதலிடத்தில் உள்ளன.
ஆனால் ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை தொடர்ச்சியாக 17 வெற்றிகளை பெற்று உகாண்டா முதலிடத்தில் உள்ளது.






