டி20 கிரிக்கெட்: தொடர்ந்து 3 சதம்... மாபெரும் வரலாற்று சாதனை படைத்த திலக் வர்மா
இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின் கடைசி 2 போட்டிகளிலும் திலக் வர்மா சதம் அடித்திருந்தார்.
ராஜ்கோட்,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி டிசம்பர் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு, பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் திலக் வர்மா தலைமையிலான ஐதராபாத் அணி, மேகாலயாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மேகாலயா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி திலக் வர்மாவின் அதிரடி சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவி 4 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 151 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய மேகாலயா 69 ரன்களில் ஆல் அவுட் ஆகி படுதோல்வியை சந்தித்தது.
இந்த சதம் திலக் வர்மா டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அடித்த 3-வது சதமாகும். ஏற்கனவே கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் (4 போட்டிகள்) இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அவர் கடைசி 2 போட்டிகளில் சதம் அடித்திருந்தார்.
இதன் மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் (உள்ளூர் & சர்வதேசம்) தொடர்ச்சியாக 3 சதம் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.