சையத் முஷ்டாக் அலி கோப்பை; விதர்பாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மும்பை
மும்பை தரப்பில் அதிரடியாக ஆடிய அஜிங்யா ரகானே 45 பந்தில் 84 ரன்கள் எடுத்தார்.
ஆலூர்,
7-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று மற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா, பெங்கால், உத்தரபிரதேசம் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் ஆலூரில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் குவித்தது. விதர்பா தரப்பில் அதர்வ தைடே 66 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் அன்கோலேகர், சூர்யன்ஷ் ஷெட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 222 ரன் என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது.
மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் ரகானே ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் பிரித்வி ஷா 26 பந்தில் 49 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 5 ரன், சூர்யகுமார் யாதவ் 9 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ஷிவம் துபே களம் இறங்கினார். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே அரைசதம் அடித்த நிலையில் 45 பந்தில் 84 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து ஷிவம் துபே உடன் சூர்யன்ஷ் ஷெட்ஜ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் விதர்பாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இறுதியில் மும்பை அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 224 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக அதிரடியாக ஆடிய அஜிங்யா ரகானே 45 பந்தில் 84 ரன்கள் எடுத்தார். மும்பை அணி அரையிறுதியில் பரோடாவை வரும் 13ம் தேதி பெங்களூருவில் எதிர்கொள்கிறது.