சையத் முஷ்டாக் அலி கோப்பை; பரோடாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை


சையத் முஷ்டாக் அலி கோப்பை; பரோடாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை
x

Image Courtesy: @BCCIdomestic

மும்பை தரப்பில் அதிரடியாக ஆடிய ரகானே 98 ரன்கள் எடுத்தார்.

பெங்களூரு,

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்த தொடரில் லீக் சுற்று, காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, பரோடா, டெல்லி, மத்திய பிரதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று காலை பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் மும்பை - பரோடா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. பரோடா தரப்பில் அதிகபட்சமாக ஷிவாலிக் சர்மா 36 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களம் இறங்கியது. மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் அஜிங்ய ரகானே ஆகியோர் களம் இறங்கினர். இதில், பிரித்வி ஷா 8 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களம் புகுந்தார். ஸ்ரேயாஸ் - ரகானே இணை அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது.

இதில் பரோடா பந்துவீச்சை ரகானே அடித்து நொறுக்கினார். அதிரடியாக அரைசதத்தை கடந்த அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 98 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் 46 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஷிவம் துபே - சூர்யன்ஷ் ஷெட்ஜ் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் மும்பை அணி 17.2 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை அணி இறுதிப்போட்டியில் டெல்லி - மத்திய பிரதேசம் இடையிலான போட்டியில் வெற்று பெறும் அணியுடன் மோதும்.


Next Story