சையத் முஷ்டாக் அலி கோப்பை; டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மத்திய பிரதேசம்
வரும் 15ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை - மத்திய பிரதேசம் அணிகள் பெங்களூருவில் மோத உள்ளன.
பெங்களூரு,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்த தொடரில் லீக் சுற்று, காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, பரோடா, டெல்லி, மத்திய பிரதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
இதில் இன்று காலை பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் மும்பை - பரோடா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பரோடாவை வீழ்த்தி மும்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து இன்று நடைபெற்ற 2வது அரையிறுதியில் டெல்லி - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அனுஜ் ராவத் 33 ரன்கள் எடுத்தார். மத்திய பிரதேசம் தரப்பில் வெங்கடேஷ் ஐயர் 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய 15.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மத்திய பிரதேசம் தரப்பில் ரஜத் படிதார் 66 ரன் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மத்திய பிரதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 15ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை - மத்திய பிரதேசம் அணிகள் பெங்களூருவில் மோத உள்ளன.