சையத் முஷ்டாக் அலி கோப்பை; மத்திய பிரதேசம், பரோடா அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மத்திய பிரதேசம், பரோடா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
பெங்களூரு,
7-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று மற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா, பெங்கால், உத்தரபிரதேசம் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இன்று காலை நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தி மத்திய பிரதேசம் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா 173 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 174 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய மத்திய பிரதேசம் 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல், இந்த தொடரில் இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பரோடா - பெங்கால் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பரோடா 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. பரோடா தரப்பில் அதிகபட்சமாக ஷஷ்வத் ராவத் 40 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 173 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய பெங்கால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 131 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் பரோடா 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. பரோடா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, லுக்மான் மேரிவாலா, அதிட் ஷெத் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இன்று நடைபெற்று வரும் மற்ற காலிறுதி ஆட்டங்களில் விதர்பா - மும்பை, டெல்லி - உத்தர பிரதேசம் அணிகள் ஆடி வருகின்றன.