இந்திய ஏ அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய நடுவரின் தவறான தீர்ப்பு... விமர்சித்த பிராட்


இந்திய ஏ அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய நடுவரின் தவறான தீர்ப்பு... விமர்சித்த பிராட்
x
தினத்தந்தி 8 Nov 2024 11:05 PM IST (Updated: 8 Nov 2024 11:09 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது.

அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா ஏ 161 ரன்களும், ஆஸ்திரேலியா ஏ 223 ரன்களும் அடித்தன. பின்னர் 62 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ 2-வது நாளில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் அடித்துள்ளது.

முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஹாரிஸ் 48 ரன்களில் இருந்தபோது இந்திய வீரர் தனுஷ் கோட்டியான் வீசிய ஒரு பந்தை தடுக்க முயற்சித்தார். இருப்பினும் தரையில் பட்ட பந்து அவருடைய பேட்டில் உரசிக் கொண்டே முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த இந்திய வீரர் படிக்கல் கைகளில் தஞ்சமடைந்தது. அதனால் விக்கெட் கிடைத்து விட்டதாக இந்திய அணியினர் கொண்டாடினர். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அம்பயர் கிரகாம் ஸ்மித் அது அவுட் இல்லை என்று அறிவித்தது இந்திய வீரர்களை ஆச்சரியமும் ஏமாற்றமும் அடைய வைத்தது.

ஏனெனில் அவருடைய பேட்டில் உரசியது நன்றாக தெரிந்தது. அதைப் பார்த்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த வர்ணனையாளர்களும் அவுட் தான் என்று நேரலையில் சொன்னார்கள். இருப்பினும் இதற்கெல்லாம் அசையாத நடுவர் கடைசி வரை தனது முடிவை மாற்றவில்லை. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் "நானாக இருந்தால் சென்றிருப்பேன்" என்று ஆஸ்திரேலிய நடுவரின் முடிவை விமர்சித்து இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது பேட்டில் பட்டது நன்றாக தெரிந்தும் அவுட் வழங்காத நடுவரையும், அவுட் என தெரிந்தும் களத்தில் நின்ற பேட்ஸ்மேனையும் விமர்சித்துள்ளார்.


Next Story