ஹேரி புரூக் போராட்டம் வீண்: இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி


ஹேரி புரூக் போராட்டம் வீண்: இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி
x
தினத்தந்தி 21 Jun 2024 6:02 PM GMT (Updated: 21 Jun 2024 9:16 PM GMT)

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.

செயின்ட் லூசியா,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர்8 சுற்றில் செயின்ட் லூசியாவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் (குரூப்2) நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய அழைத்தார். இதைத் தொடர்ந்து குயின்டான் டி காக்கும், ரீஜா ஹென்ரிக்சும் தென்ஆப்பிரிக்காவின் இன்னிங்சை தொடங்கினர்.

தடாலடியாக மட்டையை சுழற்றிய இவர்கள் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் 63 ரன்கள் திரட்டினர். டி காக் 22 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 200-ஐ நெருங்கும் என்றே தோன்றியது. ஆனால் 'பவர்-பிளே' க்கு பிறகு இவர்களின் ரன்ரேட்டை இங்கிலாந்து பவுலர்கள் கட்டுப்படுத்தினர்.

அணியின் ஸ்கோர் 86-ஆக உயர்ந்த போது (9.5 ஓவர்) ஹென்ரிக்ஸ் 19 ரன்னில் கேட்ச் ஆனார். குயின்டான் டி காக் 65 ரன்களில் (38 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த கிளாசென் (8 ரன்), கேப்டன் மார்க்ரம் (1 ரன்) தடுமாற்றத்துடனே நடையை கட்டினர்.

இதன் பின்னர் டேவிட் மில்லரின் (43 ரன், 28 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) பேட்டிங் மட்டுமே குறிப்பிடும்படி இருந்தது. 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 163 ரன் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், அடில் ரஷித், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 164 ரன் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 61 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதில் பில் சால்ட் (11 ரன்), கேப்டன் ஜோஸ் பட்லர் (17 ரன்) ஆகியோர் வீழ்ந்ததும் அடங்கும். இதன் பின்னர் ஹாரி புரூக்கும், லியாம் லிவிங்ஸ்டனும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். லிவிங்ஸ்டன் 33 ரன்னில் கேட்ச் ஆனார். கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் நோர்டியா வீசினார். முதல் பந்தில் ஹாரி புரூக் ( 53 ரன், 37 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அத்துடன் அவர்களின் நம்பிக்கையும் தகர்ந்தது. அந்த ஓவரில் அவர்களால் 6 ரன்னே எடுக்க முடிந்தது.

20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்து அடங்கியது. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2-வது வெற்றியுடன் அரைஇறுதி வாய்ப்பையும் நெருங்கியது.


Next Story