சிங்கத்தின் குகைக்குள் சுப்மன் கில் செல்கிறார் - இந்திய முன்னாள் வீரர் எச்சரிக்கை

image courtesy:PTI
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. சமீபத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அத்துடன் இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் சுப்மன் கில்லை எச்சரிக்கும் வகையில் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அதில், "இந்தியாவுக்கு டெஸ்ட் கேப்டனாக இருப்பதன் மகத்துவத்தை அவர் (சுப்மன் கில்) இப்போது உணர்ந்திருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் சிங்கத்தின் குகைக்குள் சென்று கொண்டிருக்கிறார். கிரிக்கெட் தேசமான இங்கிலாந்துக்கு சென்று விளையாடுவது எளிதல்ல. பல சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணிகளே அங்கு சென்று விளையாடுவதற்கு சிரமப்பட்டுள்ளன.
இந்த தொடரில் சுப்மன் கில்லுக்கு அதிர்ஷ்டமாக உள்ளது ஒன்றே ஒன்றுதான். அது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு தாக்குதல் மட்டுமே. ஆனால் இங்கிலாந்து அணியின் பேட்டிங் நிச்சயமாக இந்தியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் பந்துவீச்சு இங்கிலாந்துக்கு பின்னடைவாக உள்ளது. அது இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம்" என்று கூறினார்.






