ஓய்வு முடிவை அறிவித்தார் ஷிகர் தவான் - ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் (வயது 38). இவர் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், 222 ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடி உள்ளார்.
மிகச்சிறந்த தொடக்க வீரராக செயல்பட்ட ஷிகர் தவான் இந்திய அணிக்காக பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றி உள்ளார். இவர் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் இந்திய அணிக்காக கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடி இருந்தார்.
அதன் பின்னர் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்வால், இஷன் கிஷான் போன்ற இளம் வீரர்களின் வருகையால் அணியில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறினார். இந்நிலையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தவான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது, வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது முக்கியமானது. அதனால் தான் நான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். இந்திய அணிக்காக நீண்ட நாள்கள் விளையாடிய மன நிறைவுடன் விடை பெறுகிறேன். பல மறக்க முடியாத நினைவுகளை என்னுள் கொண்டுள்ளேன் என கூறினார்.
ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கி இந்தியாவின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ஷிகர் தவான் ஓய்வு முடிவை அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.