விதிமுறைக்கு புறம்பான பந்துவீச்சு: ஷகிப் அல் ஹசன் மீதான தடை நீக்கம்

image courtesy: PTI
ஷகிப் அல் ஹசன் மீண்டும் பந்து வீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டாக்கா,
வங்காளதேச அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் கடந்த வருடம் சந்தேகத்திற்குரிய வகையில் பந்து வீசுவதாக சர்ச்சையில் சிக்கினார். இதனால் இவர் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்தது. இதனையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பந்துவீச்சு சோதனையில் அவர் விதிமுறைக்கு புறம்பாக பந்து வீசுவது கண்டு பிடிக்கப்பட்டது. 2-வது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் தோல்வியை தழுவினார்.
இதனை சரி செய்யும் வரை அவர் எந்த வித போட்டிகளிலும் பந்து வீச அனுமதி இல்லை என்று ஐ.சி.சி. அறிவித்தது. இதன் காரணமாக தனது கெரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் இவர் சமீப காலமாக வங்காளதேச அணியில் இடம் பெறவில்லை. அத்துடன் ஒரு பேட்ஸ்மேனாக அவரை அணியில் சேர்க்க ஆர்வம் காட்டாத வங்காளதேச கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து கழற்றி விட்டது.
பல கட்ட முயற்சிக்கு பின் தற்போது தனது பந்துவீச்சை சரி செய்த ஷகிப் 3-வது முறை சோதனையின்போது விதிமுறைக்கு உட்பட்டு பந்து வீசினார். இதனால் அவர் மீதான தடை நீக்கப்பட்டு, பந்து வீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.