இங்கிலாந்து தொடரில் சாய் சுதர்சன் அசத்துவார் - மஹேலா ஜெயவர்தனே


இங்கிலாந்து தொடரில் சாய் சுதர்சன் அசத்துவார் - மஹேலா ஜெயவர்தனே
x

image courtesy:PTI

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த அணியில் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் கலக்கிய தமிழகத்தை சேர்ந்த இடக்கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், டெஸ்ட் அணிக்கு முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளார். மேலும் சாய் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உடையவர் என்பதால் அவரை அணியில் சேர்த்ததாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் சாய் சுதர்சன் அசத்துவார் என இலங்கை முன்னாள் வீரரான, மும்பை அணியின் தலைமை பயிற்சியாளருமான மஹேலா ஜெயவர்தனே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இடது கை ஆட்டக்காரரான அவரிடம் எல்லா விதமான ஷாட்டுகளும் இருக்கின்றன.

மேலும், டெக்னிக்கலாகவும் அவர் மிகவும் வலுவாக இருக்கிறார். எனவே தான் சொல்கிறேன் நிச்சயம் சவாலான இங்கிலாந்து மைதானங்களில் கூட அவரிடம் உள்ள ஸ்கில்களை வைத்து அவரால் நிச்சயம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

ஏற்கனவே இங்கிலாந்தில் அவர் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளதால் அவருக்கு அந்த அனுபவம் கை கொடுக்கும். சாய் சுதர்சன் போன்ற திறமையான வீரர் நிச்சயம் இங்கிலாந்து தொடரில் அசத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story