ரோகித் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3வது டெஸ்ட் வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது.
அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. அந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் இல்லாததால் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார். முதல் போட்டியில் ராகுல் சிறப்பாக செயல்பட்டதால் 2வது போட்டியிலும் அவரே தொடக்க வீரராக களம் இறங்கினார். ரோகித் சர்மா 6வது இடத்தில் களம் இறங்கினார்.
இந்நிலையில், பிரிஸ்பேனில் நடைபெறும் 3வது போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதவது, ரோகித் சர்மா இல்லாததால் தான், முதல் டெஸ்டில் துவக்க வீரராக ராகுல் வந்தார். ஜெய்ஸ்வால் உடன் சிறப்பாக விளையாடியதால், இரண்டாவது போட்டியிலும் துவக்க இடத்தில் நீடித்தார்.
ஆனால், ரன் குவிக்க தவறினார். வரும் போட்டியில் ரோகித் துவக்க வீரராக மீண்டும் களமிறங்க வேண்டும். பேட்டிங் வரிசையில் ராகுல் 5 அல்லது 6வது இடத்தில் வரலாம். துவக்கத்தில் ரோகித் விரைவாக ரன் சேர்த்தால், சதம் அடிக்கவும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.