ரோகித் சர்மாவின் தவறான கேப்டன்ஷிப்தான் தோல்விக்கு காரணம் - பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
அடிலெய்டு,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
முன்னதாக முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரோகித் விலகிய நிலையில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார். தற்போது ரோகித் தலைமையில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் அப்போட்டியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடியபோது பும்ராவுக்கு வெறும் 4 ஓவர்கள் மட்டுமே ரோகித் சர்மா கொடுத்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி விமர்சித்துள்ளார். அதே போல ஆஸ்திரேலிய பவுலர்கள் தொடர்ந்து ஸ்டம்ப் லைனை அட்டாக் செய்து பந்து வீசினார்கள்.
ஆனால் இந்திய பவுலர்கள் ஸ்டம்புக்கு வெளியே வீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை எளிதாக பேட்டிங் செய்ய விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த இரண்டையும் கட்டுப்படுத்த தவறிய ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது தோல்வியை கொடுத்ததாகவும் பாசித் அலி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "40 நிமிட ஸ்பெல்லில் பும்ரா வெறும் 4 ஓவர்கள் மட்டுமே வீசினார். பும்ரா இன்னும் 2 ஓவர்கள் வீசியிருக்க வேண்டும். ஹெட் அப்போதுதான் பேட்டிங் செய்ய வந்திருந்ததால் பும்ரா அவரை அவுட்டாக்கி இருக்கலாம். அவருடைய பிட்னஸ் பணிச்சுமை ஆகியவை எனக்குத் தெரியாது. ஆனால் அவர் இன்னும் 2 ஓவர்கள் வீசியிருந்தால் விக்கெட் கிடைத்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அது ஒரு தவறு.
மறுபுறம் பும்ரா இல்லாத நேரத்தில் ஹெட் அட்டாக் செய்தார். குறிப்பாக ராணா, நிதிஷ் ரெட்டி, அஸ்வின், ஆகியோருக்கு எதிராக அவர் அதிரடியாக விளையாடினார். பும்ரா பவுலிங் செய்யாததால் அவர் நன்கு செட்டிலாகி பேட்டிங் செய்தார். அதுவே ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் தங்களுடைய வெற்றியை வலுவாக்க உதவியது.
ஆஸ்திரேலிய பவுலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை ஸ்டம் லைனில் விளையாட வைத்தார்கள். ஆனால் இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்டம்புக்கு வெளியே அகலமாக வீசினார்கள். அது கேப்டன்ஷிப் தவறு. உங்களுடைய கேப்டனும் திட்டங்களை வகுத்து பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கலாம். ஆனால் ரோகித் சர்மா அதை செய்து நாம் பார்க்கவில்லை" என்று கூறினார்.