ரோகித் சர்மா அதிரடி... ஆஸ்திரேலியாவுக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா


ரோகித் சர்மா அதிரடி... ஆஸ்திரேலியாவுக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
x

image courtesy: BCCI twitter

தினத்தந்தி 24 Jun 2024 4:37 PM GMT (Updated: 24 Jun 2024 6:22 PM GMT)

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

செயின்ட் லூசியா,

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. குரூப்1-ல் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களது கடைசி லீக்கில் மோதுகின்றன.

செயின்ட் லூசியாவில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவுடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - விராட் கோலி களமிறங்கினர். இதில் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய பேட்டிங் சொதப்பலாக இருக்க போகிறது என்று எதிர்பார்த்த நிலையில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். அவர் ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் 29 ரன்களை குவித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 19 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.

நடப்பு டி20 தொடரில் அதிவேக அரை சதம் அடித்த வீரர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 92 ரன்னில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து ஷிவம் துபே-சூர்யகுமார் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16 பந்தில் 31 ரன்கள் எடுத்த நிலையில் சூர்யகுமார் யாதவ் அவுட்டானார். அதனை தொடர்ந்து துபே 28 ரன்களில் வெளியேறினார். இறுதியில் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி 200 ரன்கள் எடுக்க உதவினார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.


Next Story