ரோகித், கில் இல்லாத சூழலில் கண்டிப்பாக அவர் முதல் போட்டியில் வேண்டும் - ரவி சாஸ்திரி


ரோகித், கில் இல்லாத சூழலில் கண்டிப்பாக அவர் முதல் போட்டியில் வேண்டும் -  ரவி சாஸ்திரி
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கில் மற்றும் ரோகித் சர்மா விளையாடவில்லை.

மும்பை,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியிலும் ஆடினர். இவ்வாறு பயிற்சி எடுத்த போது இந்திய வீரர் சுப்மன் கில் காயத்தில் சிக்கினார். இதனால் அவர் முதலாவது டெஸ்டை தவற விடுகிறார். மேலும் கேப்டன் ரோகித் சர்மா முதலாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் வேண்டும் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது பயிற்சி டெஸ்ட் போட்டியில் மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் தடுமாறினார்கள். ஆனால் முதல் முறையாக விளையாடிய ஜுரேல் 80, 68 ரன்கள் குவித்து இந்திய ஏ அணியின் வெற்றிக்கு போராடினார். எனவே அவர் முதல் போட்டியில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் ரவி சாஸ்திரி இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"அவரால் சிறந்த பேட்ஸ்மேனாக எளிதாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன். எதிர்புறம் விக்கெட்டுகள் இழந்து அணி தடுமாறியபோது அவர் இங்கே மிகவும் பொறுமையுடன் அழுத்தமான சூழலில் தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அது என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் அழுத்தத்தின் கீழ் நிறைய வீரர்கள் தடுமாறியதை நீங்கள் பார்த்தீர்கள். அழுத்தத்தின் கீழ் அந்த வீரர்கள் பதற்றமாக விளையாடியதையும் நீங்கள் பார்த்தீர்கள்.

ஆனால் இந்த பையன் அது போன்ற சமயங்களில் மிகவும் பொறுமையுடன் பதறாமல் நின்றார். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் கூட விக்கெட்டுகள் விழுந்தபோது அவர் நிதானமாக விளையாடி அசத்தினார். அந்த வகையில் இங்கே விளையாடுவதற்கு அவர் நல்ல முறையில் தயாராக இருப்பதாக நான் பார்க்கிறேன். அப்படி இருந்தால் நீங்கள் அவருக்கு தாராளமாக வாய்ப்பு கொடுக்கலாம்.

இங்கே 80, 60 ரன்கள் அடித்தது அவருக்கு சிறப்பாக விளையாடுவதற்கான நல்ல தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும். நல்ல பார்மில் இருக்கும் அவர் பந்தை தடுத்து நிறுத்துபவர் மட்டுமல்ல. நல்ல ஷாட்டுகளை வைத்துள்ளார். பின்வரிசை வீரர்களுடனும் அவரால் பேட்டிங் செய்ய முடியும் என்பது முக்கியமாகும். அப்படித்தான் இந்தியா தங்களுடைய சமநிலையை சரி செய்ய பார்க்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story