தன் மீதான கைது வாரண்ட் குறித்து மனம் திறந்த ராபின் உத்தப்பா


தன் மீதான கைது வாரண்ட் குறித்து மனம் திறந்த ராபின் உத்தப்பா
x

image courtesy: PTI

ராபின் உத்தப்பாவுக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வந்தவர் ராபின் உத்தப்பா. மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார். உத்தப்பா இந்தியாவுக்காக 46 ஒருநாள் மற்றும் 13 டி 20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்நிலையில், ராபின் உத்தப்பாவுக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதியின் பிராந்திய ஆணையர் சடாக்சரி கோபால் ரெட்டி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.தன் மீதான கைது வாரண்ட் குறித்து ராபின் உத்தப்பா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எனக்கு எதிரான பி.எப். வழக்கு தொடர்பான சமீபத்திய செய்திகளைத் தொடர்ந்து, ஸ்ட்ராபெரி லென்செரியா பிரைவேட் லிமிடெட், சென்டவுரஸ் லைப்ஸ்டைல் பிரான்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் பெர்ரிஸ் பேஷன் ஹவுஸ் உடனான எனது தொடர்பு குறித்து சில விளக்கங்களை வழங்க விரும்புகிறேன். 2018-19 ஆம் ஆண்டில், நான் இந்த நிறுவனங்களுக்கு கடன்கள் வடிவில் நிதி அளித்ததால் நான் இயக்குநராக நியமிக்கப்பட்டேன்.

இருப்பினும், நான் நிர்வாகப் பொறுப்பிலோ, அல்லது அந்நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளிலோ ஈடுபடவில்லை. ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர், டி.வி தொகுப்பாளர் மற்றும் வர்ணனையாளர் என்ற வகையில், அந்நிறுவனங்களின் செயல்பாடுகளில் பங்கேற்க எனக்கு நேரமும் நிபுணத்துவமும் இல்லை. உண்மையில், இன்றுவரை நான் நிதியளித்த வேறு எந்த நிறுவனங்களிலும் நான் நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.

வருந்தத்தக்க வகையில், இந்த நிறுவனங்கள் நான் கடனாகக் கொடுத்த நிதியைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதால், சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு என்னை இட்டுச் சென்றது. நானும் பல வருடங்களுக்கு முன் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நிலுவைத் தொகையை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியபோது, எனது சட்டக் குழு பதிலளித்தது.

இந்த நிறுவனங்களில் எனக்கு எந்த பங்கும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது மற்றும் எனது ஈடுபாடு இல்லாததை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நிறுவனங்களிடமிருந்து வழங்கியது. இருந்த போதிலும், வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளனர்.

மேலும் எனது சட்ட ஆலோசகர்கள் வரும் நாட்களில் இந்த பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். முழுமையான உண்மைகளை தயவுசெய்து முன்வைக்கவும், பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story