ரிஷப் பண்ட்-க்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிப்பு - காரணம் என்ன...?

Image Courtesy: @IPL / @LucknowIPL
லக்னோ பிளேயிங் லெவனில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரிக்கெல்டன் 58 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 216 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 54 ரன் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், இப்போட்டியில் லக்னோ அணி பந்துவீச்சாளர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அந்த அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லக்னோ அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த அனைத்து வீரர்களுக்கும் (இம்பேக்ட் வீரர் உட்பட) தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் (எது குறைவோ அது எடுத்துகொள்ளப்படும்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.






