ஐ.பி.எல். அணியின் ஆலோசகராகும் ராகுல் டிராவிட்...? - வெளியான தகவல்
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மும்பை,
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் தங்களது முடிவுகளை அறிவித்தனர்.
மேலும், டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
ஒருவேளை இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டால் அவர் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதையடுத்து கொல்கத்தா அணியின் ஆலோசகர் பதவி காலியாகும். இந்நிலையில் இந்திய அணியிலிருந்து விடைபெற்ற ராகுல் டிராவிட்டை தங்களுடைய அணியின் ஆலோசகராக நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்.சி.ஏ இயக்குனர், அண்டர்-19 மற்றும் இந்தியா ஏ ஆகிய அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் டிராவிட் 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்ற அனுபவத்தை பெற்றுள்ளார். எனவே ராகுல் டிராவிட்டை ஆலோசகராக நியமிக்க அந்த அணி நிர்வாகம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.