இங்கிலாந்து அணிக்காக 20 ஆண்டுகள் விளையாடியது பெருமை அளிக்கிறது - ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
லண்டன்,
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 10ம் தேதி லண்டனில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்துடன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 விக்கெட்டுடன் விடை பெற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் போட்டி முடிந்த பின்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இன்று காலை (நேற்று) இரு அணி வீரர்களும் வரிசையில் நின்று மரியாதை கொடுத்ததும், ரசிகர்களின் அபரிதமான ஆதரவும் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் அழுகையை எனக்குள் கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன்.
இங்கிலாந்து அணிக்காக 20 ஆண்டுக்கு மேலாக விளையாடியது உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. அதுவும் ஒரு வேகப்பந்து வீச்சாளராக நீடித்தது நம்ப முடியாத ஒன்றாகும். ஒவ்வொரு முறை இங்கிலாந்தின் சீருடையுடன் இறங்கும் போது எனது எல்லா முயற்சியும் வெற்றிக்காகவே இருக்கும். என்னை பொறுத்தவரை இங்கிலாந்துக்காக விளையாடுவதே உலகின் மிகச்சிறந்த பணி. அதை என்னால் நீண்ட காலம் செய்ய முடிந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பெரிய அளவில் காயமின்றி விளையாடியதில் நான் அதிர்ஷ்டசாலி. சில மிகச்சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடியது சிறப்பு வாய்ந்தது. டெஸ்டில் வெற்றி பெறுவதும், தொடரை வெல்வது மட்டுமே நான் எப்போதும் விரும்பும் விஷயம். ஆஸ்திரேலியா, இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது, உலகின் நம்பர் ஒன் அணியாக உருவெடுத்தது இவற்றில் நான் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவில் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.