ஓய்வு பெறும்படி ரோகித், கோலிக்கு நெருக்கடி ? பிசிசிஐ மறுப்பு

ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வு விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மவுனம் கலைத்துள்ளது
லண்டன்,
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதும் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 போட்டியில் இருந்துஓய்வு பெற்றனர் .
தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் முன்பாக கடந்த மே மாதம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் ரோகித் சர்மா திடீரென அறிவித்தார். இதைத்தொடர்ந்து விராட்கோலியும் ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இருவரும் சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு பயணத்தின் போது வீரர்கள் மனைவியை உடன் அழைத்து செல்வதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் இளம் வீரர்களுக்கு வழிவிடும்படி கிரிக்கெட் வாரிய தேர்வு குழுவினர் அளித்த அழுத்தம் ஆகியவை இருவரும் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறு காரணம் என்று செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வு விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளது. இருவரும் ஓய்வு பெற பி.சி.சி.ஐ. எந்தவித நெருக்கடியும் அளிக்கவில்லை என்று அதன் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'நான் ஒரு விஷயத்தை அனைவருக்கும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா, விராட்கோலி இல்லாததால் நாம் எல்லோரும் வருந்துகிறோம். ஆனால் ஓய்வு பெறும் முடிவை இருவரும் சொந்தமாகவே எடுத்தனர். என்றார்.






