பண்ட் சிறப்பான பேட்டிங்.. தென் ஆப்பிரிக்கா ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ வெற்றி


பண்ட் சிறப்பான பேட்டிங்.. தென் ஆப்பிரிக்கா ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ வெற்றி
x

image courtesy: PTI

இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது.

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா ‘ஏ’- தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மைய மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ 309 ரன்னும், இந்தியா ‘ஏ’ 234 ரன்னும் எடுத்தன. பின்னர் 75 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி 48.1 ஓவர்களில் 199 ரன்னில் அடங்கியது. இந்தியா தரப்பில் தனுஷ் கோடியன் 4 விக்கெட்டும், அனஷூல் கம்போஜ் 3 விக்கெட்டும், குர்னோர் பிரார் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதனையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய ‘ஏ’ அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே 6 ரன்னிலும், அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 5 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்சன் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 32 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத்தொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட், ரஜத் படிதாருடன் ஜோடி சேர்ந்தார். ரஜத் படிதார் நிதானமாக ஆட, மறுமுனையில் ரிஷப் பண்ட் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டி அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தார். ஸ்கோர் 119 ரன்னை எட்டிய போது ரஜத் படிதார் 28 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

3-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய ‘ஏ அணி 4 விக்கெட்டுக்கு 119 ரன்கள் அடித்திருந்தது. அரைசதம் விளாசிய ரிஷப் பண்ட் 64 ரன்களுடனும் (81 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஆயுஷ் பதோனி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இந்தியா வெற்றி பெற இன்னும் 156 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பண்ட் - பதோனி ஜோடி இந்திய அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தது. பதோனி 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் கோட்டியான் (23 ரன்கள்), மனவ் சுதர் (20 ரன்கள்) மற்றும் கம்போஜ் (37 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

73.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் அடித்த இந்தியா ஏ 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஏ 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தனுஷ் கோட்டியான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

1 More update

Next Story