எங்களது பந்து வீச்சு உண்மையிலேயே சிறப்பாக இருந்தது - ஹர்மன்ப்ரீத் கவுர்


எங்களது பந்து வீச்சு உண்மையிலேயே சிறப்பாக இருந்தது - ஹர்மன்ப்ரீத் கவுர்
x

image courtesy; @BCCIWomen

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

வதோதரா,

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38.5 ஓவர்களில் 162 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 61 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதனையடுத்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 28.2 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 167 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஜொலித்த தீப்தி சர்மா 39 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. தீப்தி சர்மா ஆட்ட நாயகியாகவும், ரேனுகா சிங் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வெற்றிக்கு பின்னர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

எங்களது பந்து வீச்சு உண்மையிலேயே சிறப்பாக இருந்தது. எப்போதும் அனைவரும் ஒருங்கிணைந்து கடினமாக உழைக்கும் போது சாதகமான முடிவு கிடைக்கும். அந்த வகையில் எல்லா வீராங்கனைகளும் அணிக்காக பங்களிப்பு அளித்த விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.

எந்த கேட்ச்சையும் தவற விடாமல் பீல்டிங்கில் 100 சதவீதம் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்று பீல்டிங் பயிற்சியாளர் எப்போதும் சொல்வார். இன்றைய ஆட்டத்தில் ஒரு கேட்ச்சை நழுவ விட்டோம். அடுத்த ஆண்டில் பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் காண்போம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story