பாபர் மட்டுமல்ல.. விராட் கோலியுடன் யாரை ஒப்பிட்டாலும் சிரிப்பேன் - பாக்.முன்னாள் வீரர்
விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று அவ்வப்போது பேச்சுகள் எழுவது வழக்கமாகும்.
லாகூர்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி நவீன் கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரராக போற்றப்படுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக 27,000+ ரன்கள் என ஏராளமான வரலாற்று சாதனைகள் படைத்து கோலாச்சி வருகிறார்.
அப்படிப்பட்ட அவர் பார்மின்றி தடுமாறிய வேளையில் அவரை விட பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை விட இங்கிலாந்தின் ஜோ ரூட் சிறந்தவர் என்று மைக்கேல் வாகன் போன்ற அந்நாட்டை சேர்ந்தவர்களும் ஒப்பிட்டு பேசுவது வழக்கமாகும்.
இந்நிலையில் இது போன்ற ஒப்பீடுகளை கேட்டு தாம் சிரிப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.
அதற்கான காரணம் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி இந்த தலைமுறையின் மகத்தான வீரர். பாபர் அசாம், ஸ்டீவ் சுமித் அல்லது ஜோ ரூட்டை அவருடன் ஒப்பிடும்போது நான் சிரிப்பேன். நாம் யாரையும் விராட் கோலியுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காக நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அது மற்ற வீரர்களுக்கு அசாத்தியம்.
ஒரு பார்மட் மட்டுமின்றி 3 வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி இந்த தலைமுறையின் மகத்தான பேட்ஸ்மேன். விராட் கோலி தனது நெறிமுறையில் மற்ற வீரர்களை விட தனித்துவமாக இருக்கிறார். 2014 இங்கிலாந்து தொடரில் தடுமாறிய அவர் அங்கிருந்து கம்பேக் கொடுத்து அடுத்த 10 வருடங்கள் அற்புதமாக விளையாடியது சாதனை கிடையாது.
2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் அவருடைய விக்கெட் எங்களுக்கு முக்கியமாக இருந்தது. அதுவே கோப்பையை வெல்லவும் உதவியது. ஒருவேளை விராட் கோலி அவுட்டாகாமல் இருந்திருந்தால் நாங்கள் தோல்வியை சந்தித்திருப்போம். ஏனெனில் அவர் சேசிங்கில் எந்தளவுக்கு சிறந்தவர் என்பதை நாம் அறிவோம்" என்று கூறினார்.