விராட், ரோகித் இல்லை.. இந்தியாவின் அதிக மதிப்பு மிக்க வீரர் இவர்தான் - அஸ்வின் பாராட்டு


விராட், ரோகித் இல்லை.. இந்தியாவின் அதிக மதிப்பு மிக்க வீரர் இவர்தான் - அஸ்வின் பாராட்டு
x
தினத்தந்தி 15 Sep 2024 11:50 AM GMT (Updated: 15 Sep 2024 1:27 PM GMT)

எப்பொழுதுமே பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியில் தற்போது ஒரு பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவது மகிழ்ச்சி என்றுஅஸ்வின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய அணியின் அனுபவ வீரரும் தமிழகத்தை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரருமான 37 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 100 டெஸ்ட் போட்டிகள், 116 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகள் என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி உள்ளார்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவின் தற்போதைய தலைசிறந்த வீரர் யார்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அப்படி அவர் கூறிய அந்த கருத்தில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை தவிர்த்து பும்ரா தான் தற்போதைய இந்தியாவின் சிறந்த வீரராக விளங்குகிறார் என்று பதில் அளித்துள்ளார். எப்பொழுதுமே பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியில் தற்போது ஒரு பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவது மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : இந்தியாவில் எப்போதுமே பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது முதல் முறையாக ஒரு பவுலர் அந்த இடத்தை பிடித்திருக்கிறார் என்பதில் மிகவும் மகிழ்ச்சி. பும்ரா நமது சகாப்தத்தில் கிடைக்கும் ஒரு பவுலராக இருக்கிறார். பும்ராவை நாம் அதிகம் கொண்டாட வேண்டும். சென்னை மக்கள் எப்பொழுதுமே பவுலர்களை அதிகம் விரும்புவார்கள்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பே சென்னை வந்த அவரை ஒரு நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக அழைத்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்தை கொண்டாடியது போல் பும்ராவை ரசிகர்கள் கொண்டாடியிருந்தனர். இப்படி ஒரு பவுலருக்கு மரியாதை கிடைக்கும் இடமாக எப்பொழுதுமே சென்னை ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். பும்ரா ஒரு சாம்பியன் வீரர் தற்போதைய இந்திய அணியின் மதிப்பு மிக்க வீரரும் அவர்தான். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story