தோனி இல்லை.. எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் இவர்தான் - விராட் கோலி

image courtesy:PTI
ஐ.பி.எல்.வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரராக விராட் கோலி உள்ளார்.
பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 18 சீசன்களாக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். ஆரம்பம் ஆன முதலே ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரராகவும் சாதனை படைத்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
நடப்பு சீசனிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 443 ரன்கள் குவித்து இளம் வீரர்களுக்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது கெரியரின் ஆரம்ப கட்டத்தில் தமக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான மார்க் பவுச்சர் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசியது பின்வருமாறு:- "ஆரம்பத்தில் நான் விளையாடிய அனைத்து வீரர்களிலும் மார்க் பவுச்சர்தான் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஏனெனில் எனது பலவீனங்கள் ஆரம்ப கட்டத்தில் என்னவாக இருக்கும்? என்பதை அவர் தான் கண்டுபிடித்தார். அதுமட்டும் இன்றி அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவையும் எனக்குள் உண்டாக்கினார்..
ஒருமுறை அவர் என்னிடம் வந்து 3-4 ஆண்டுகளுக்குப் பிறகு நான் இந்தியாவிற்கு வர்ணனையாளராக வரும்போது, நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதை காணவில்லை என்றால், அது உன்னுடைய தவறுதான். நீ ஒரு மிகச்சிறந்த வீரர் என்று கூறியிருந்தார். அவர்கூறிய அந்த வார்த்தை எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. இன்று நான் பெரிய வீரராக இருப்பதற்கு அதுபோன்ற சில வார்த்தைகளும் காரணம் என நினைக்கிறேன்.
அதே போன்று ரசிகர்களிடமிருந்து நான் பெற்ற அன்பை, எந்த பதக்கமோ அல்லது எந்த கோப்பையோ நெருங்க முடியாது என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.






