பாகிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை படைத்த முஷ்பிகுர் -மெஹிதி ஹசன் இணை


பாகிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை படைத்த  முஷ்பிகுர் -மெஹிதி ஹசன் இணை
x
தினத்தந்தி 26 Aug 2024 1:22 PM GMT (Updated: 26 Aug 2024 1:29 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

ராவல்பிண்டி,

பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்களும், வங்காளதேச அணி 565 ரன்களும் குவித்தன.

117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி வங்காளதேச வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 146 ரன்களில் சுருண்டது. இதனால் வங்காளதேச அணிக்கு 30 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து எளிதான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியில் வங்காளதேச அணியின் முதல் இன்னிங்சில் 7-வது விக்கெட்டுக்கு கை கோர்த்த முஷ்பிகுர் ரஹிம் - மெஹிதி ஹசன் மிராஸ் இணை 196 ரன்கள் சேர்த்து அசத்தியது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்து புதிய சாதனையை இந்த ஜோடி படைத்தது.

இதற்கு முன்பு 1976-ம் ஆண்டு கராச்சியில் நடந்த டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ-வாரென் லீஸ் ஜோடி 186 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள ரஹிம் - மிராஸ் இணை புதிய சாதனை படைத்துள்ளது.


Next Story