அந்த இந்திய வீரரின் கேட்சை தவறவிட்டதுதான் நான் ஓய்வு பெற காரணம் - கில்கிறிஸ்ட் பகிர்ந்த தகவல்


அந்த இந்திய வீரரின் கேட்சை தவறவிட்டதுதான் நான் ஓய்வு பெற காரணம் - கில்கிறிஸ்ட் பகிர்ந்த தகவல்
x

image courtesy: PTI

தினத்தந்தி 24 Sep 2024 3:15 PM GMT (Updated: 24 Sep 2024 3:20 PM GMT)

ஆடம் கில்கிறிஸ்ட் கடந்த 2008-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட், தலை சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 96 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் அதிக ரன்கள் (5570) மற்றும் சதங்கள் (17) அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு பெற்றது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.

குறிப்பாக 2008-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் ஆடம் கில்கிறிஸ்ட் விளையாடினார். ஆனால் அத்தொடரில் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற போட்டியுடன் அவர் திடீரென ஓய்வை அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

இந்நிலையில் அப்போட்டியில் இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் கொடுத்த எளிதான கேட்சை தான் தவற விட்டதாக கில்கிறிஸ்ட் வருத்தத்தை தெரிவித்துள்ளார். அந்த தருணமே மேற்கொண்டு நாம் விளையாடுவதற்கு தகுதியானவர் இல்லை என்பதை உணர வைத்து ஓய்வை அறிவிக்க வைத்ததாகவும் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாலில் கடைசியாக நான் விளையாடிய தொடரில் வேடிக்கையான விஷயம் நடந்தது. பிரட் லீ பந்து வீச்சில் நான் ஒரு கேட்ச்சை பிடிக்க முயற்சித்தேன். அன்றைய நாளுக்கு முந்தைய நாள் இரவு நான் என்னுடைய பயணத்திட்டங்களை பற்றி எனது மனைவியுடன் தொலைபேசியில் பேசினேன். ஏனெனில் நாங்கள் இந்திய தொடருக்குப்பின் வெஸ்ட் இண்டீஸ் செல்ல இருந்தோம். அந்தத் தொடரில் நான் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பின்னர் இந்தியாவுக்கு சென்று என்னுடைய 100வது போட்டியில் விளையாடியிருப்பேன். அதனால் 100 போட்டிகளில் விளையாடிய சில நட்சத்திர வீரர்களின் பட்டியலில் நானும் இணைந்திருப்பேன்.

ஆனால் அடுத்த நாள் விவிஎஸ் லக்ஷ்மன் கொடுத்த எளிதான கேட்ச்சை நான் தவற விட்டேன். அப்போது பந்து தரையில் பட்டதை நான் ரீப்ளேவில் 32 முறை பார்த்திருப்பேன். அதை பார்த்த பின் அப்படியே திரும்பி மேத்யூ ஹெய்டனிடம் 'நான் முடிந்து போனவன்' என்று சொன்னேன். அதுவே ஓய்வு பெறுவதற்கான தருணம் என்பதையும் நான் உணர்ந்தேன். அதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரையும் இந்தியாவில் 100வது போட்டியில் விளையாடுவதைப் பற்றியும் சிந்திக்காமல் ஓய்வு முடிவை எடுத்தேன்.

அப்போது ஹெய்டன் 'கமான் நண்பா உங்களை நீங்களே வீழ்த்தாதீர்கள். இது நீங்கள் விட்ட முதல் கேட்சும் கிடையாது. கடைசியும் கிடையாது' என்று ஆதரவு தெரிவித்தார். ஆனால் அந்த முடிவை மாற்றாததற்காக நான் வருத்தப்படவில்லை. அதுவே இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் என்னால் மறக்க முடியாத தருணம்" என்று கூறினார்.


Next Story