ஒருவேளை நானும்... - முகமது சிராஜை கலாய்த்த இந்திய முன்னாள் வீரர்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் சிராஜ் மொத்தம் 20 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 1-3 (5 போட்டிகள்) என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் 10 வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்ததன் காரணமாகவே இந்திய அணி தோல்வியை சந்தித்தது என்று பலராலும் பேசப்பட்டது. இருப்பினும் பந்துவீச்சிலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் மட்டுமே போராடினர். மற்ற பவுலர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளராக பும்ரா (32 விக்கெட்டுகள்) இருந்த வேளையில், இந்தியா தரப்பில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2-வது பந்துவீச்சாளராக சிராஜ் (20 விக்கெட்டுகள்) இருந்தார். இவர் இந்த தொடரில் ஸ்டார்க், நாதன் லயன் ஆகியோரை விட அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
சமீப காலங்களாக பும்ராவுக்கு அடுத்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பவுலராக சிராஜ் செயல்பட்டு வருவதாக பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் இவர் மீது அவ்வப்போது விமர்சனங்கள் எழுவது வழக்கம்.
இந்நிலையில் முகமது சிராஜின் பந்துவீச்சு பாராட்டக்கூடிய அளவிற்கு ஒன்றும் கிடையாது என இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கலாய்த்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சிராஜ் ஆஸ்திரேலியா தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய பந்துவீச்சாளராகத்தான் இருக்கிறார். ஏனெனில் அந்த அளவிற்கு அவர் அந்த தொடரில் அதிகமாக ஓவர்களை வீசி இருக்கிறார்.ஒருவேளை நானும் இதுபோன்று அதிக ஓவர்களை வீசியிருந்தால் என்னாலும் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியும்" என்று கூறியுள்ளார்.