தமிழகத்துக்கு எதிரான ஆட்டம்: முதல் இன்னிங்சில் விதர்பா முன்னிலை

image courtesy: twitter/@BCCIdomestic
தமிழக அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
கோவை,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு - விதர்பா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 113 ரன்களும், இந்திரஜித் 96 ரன்களும் அடித்தனர். விதர்பா தரப்பில் நாச்சிகேத் பூதே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அபாரா பேட்டிங்கை வெளிப்படுத்திய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 148.4 ஓவர்களில் 501 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் விதர்பா முதல் இன்னிங்சில் 210 ரன்கள் முன்னிலை பெற்றது.
அந்த அணியில் யாஷ் ரத்தோட் 133 ரன்களும், துருவ் ஷோரே 82 ரன்களும், அமன் 80 ரன்களும், நாச்சிகேத் பூதே 51 ரன்களும் அடித்தனர். தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 210 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் அடித்துள்ளது. ஆதிஷ் 2 ரன்களுடனும், விமல் குமார் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தமிழக அணி இன்னும் 204 ரன்கள் பின்தங்கி உள்ளது.
நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






